சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தனியார் பள்ளிகள் மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடந்தது. 2024-2025ம் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மற்றும் ஐஜிசிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் 3565 தமிழாசிரியர்களுக்கு பயிற்சி முகாம் இன்று நடக்கிறது. இந்த புத்தாக்கப் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் ெபாய்யாமொழி தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழாசிரியர்களுக்காக இன்று தொடங்கும் இந்த புத்தாக்கப் பயிற்சியில் தமிழ் இலக்கணம், பாடப்பொருள், செய்யுள், உரைநடை மதிப்பீடு என்கிற வகையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தனியார் பள்ளி சார்ந்த மாணவ, மாணவியரும் நம்முடைய குடும்பம் தான் என்ற வகையில் தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இருமொழிக் கொள்கையை உயர்த்திப் பிடித்து சட்டமாக்கிய அண்ணா பெயரில் இயங்கும் இந்த நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் இந்த நிகழ்வும் பொருத்தமாக இருக்கிறது. கடந்த ஆண்டும் இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அவ்வப்போதுள்ள தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுசார்ந்த விஷயங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பிற தொழில் நுட்பங்களை நாம் கருவிகள் மூலம் கற்பதைவிட ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையின் மூலம் பாடம் நடத்தும் போது கற்றுக்கொள்வதைப்போல வேறு எதுவும் நமக்கும் பெரிய பயனுள்ளதாக இருக்க முடியாது. எந்த தொழில் நுட்பத்தினாலும் அதை கொடுத்துவிட முடியாது. இந்நிலையில், தமிழ் மொழியை நாம் உயர்த்திப் பிடித்தே ஆகவேண்டும்.
அந்த மொழி இல்லாமல் போய்விட்டால் நாம் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை இழந்துவிடுவோம். 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பைத் தமிழன் பயன்படுத்தி இருக்கிறான் என்ற பெருமையை நாம் பார்த்திருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நமது தமிழ் மொழி எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக கீழடி, கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உணர்த்துகின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8ல் உள்ள 22 மொழிகளையும் படிக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நமக்கு செல்போன் முக்கியமாகத் தோன்றுகிறது. செல்போனை நாம் உயர்த்திப் பிடிக்கும் நாம் செம்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.
The post நமது மொழியை தூக்கிப் பிடியுங்கள்; செம்மொழி இருக்கும்போது மும்மொழி எதற்கு: அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் appeared first on Dinakaran.