விழுப்புரம்: ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பன சூழலில், விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக செயற்குழு நாளை (ஜூலை 8) காலை கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தை அன்புமணி புறக்கக்கணிக்கக் கூடும் என தெரிகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுப் பட்டு உள்ளது. இரு கோஷ்டிகளாக நிர்வாகிகள் மற்றும் தொண்டனர் பிரிந்துள்ளனர். நீயா, நானா என பார்த்து விடுவோம் என்ற முடிவில் இருவரும் உள்ளனர். ராமதாஸும், அன்புமணியும் தங்களது எதிர் முகாமில் உள்ளவர்களை பரஸ்பரம் நீக்கி வருகின்றனர். இதன் உச்சமாக, பாமக கொறடா பொறுப்பில் இருந்து ராமதாஸ் ஆதரவு பெற்றவரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை நீக்குமாறு சட்டப்பேரவைத் தலைவரிடம் அன்புமணியின் கடிதத்தை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் கொடுத்துள்ளனர்.