ஆளுநர் பதவிக்கான அதிகாரம் குறித்து தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். ஆனாலும் அடாவடியாக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தினார் ஆளுநர். இந்த மாநாடும், அவரது பேச்சும் கேலிக்கூத்தாக மாறியுள்ளது. குறிப்பாக ‘‘தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் தரம் சிறப்பாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளின் தரம் குறைந்தே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் பி.ஹெச்டி பட்டம் முடித்து வெளியில் செல்பவர்கள் சாதாரண பணிகளுக்கு மட்டுமே செல்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர். அரசு பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்,’’ என்று அவர் தெரிவித்திருப்பது விரக்தியின் வெளிப்பாடு என்கின்றனர் கல்வியாளர்கள். ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இங்கு வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆளுநர். இந்தியாவிலேயே கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று ஒன்றிய அரசே பெருமிதம் தெரிவித்துள்ளது. ஒன்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலே இதற்கான சாட்சி.
அதில், தேசிய அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லியில் 88 கல்லூரிகள், மகாராஷ்டிரத்தில் 30 கல்லூரிகள், கர்நாடாகாவில் 78 கல்லூரிகள், உத்தரப்பிரதேசத்தில் 71 கல்லூரிகள், அசாம் மாநிலத்தில் 15 கல்லூரிகள், மத்தியப் பிரதேசம், சண்டிகர், ஜார்க்கண்ட் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். இந்த பட்டியலானது உயர்கல்வியில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
இதே போல், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவு திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் என பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மட்டுமல்ல, பள்ளிக்கல்வியிலும் முத்திரை பதித்து வருகிறது தமிழ்நாடு. அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ்2 முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர் எண்ணிக்கை 2021-22ம் கல்வியாண்டில் 45சதவீதமாக இருந்தது. 2023-24ம் கல்வியாண்டில் இது 74சதவீதமாக அதிகரித்துள்ளது. இதர பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாடு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இது ஒரு புறமிருக்க குடிமைப்பணி தேர்வில் சாதித்த மாணவர்கள் மத்தியில் முதல்வர் உரையாற்றியுள்ளார். இந்த உரையானது தமிழ்நிலத்தில் கல்வியின் தனித்துவம் உயர்ந்து நிற்பதை மீண்டும் ஒரு முறை பறைசாற்றியுள்ளது. ‘கல்வி தான் நம் ஆயுதம். எந்த இடர் வந்தாலும் கல்வியை விட்டு விடக்கூடாது. தமிழகத்திற்கென அறிவுமுகம் இருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் எந்த மூலைக்கு சென்று நீங்கள் பணியாற்றினாலும் சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து ஏழை, எளிய மக்களின் உயர்வுக்கு பாடுபடவேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஆளுநரின் ஆதாரமற்ற கூக்குரல், முதல்வரின் செயல்பாடுகளுக்கு முன்பு மீண்டும் சிதைந்துள்ளது என்பதே நிதர்சனம்.
The post சிதைந்த கூக்குரல் appeared first on Dinakaran.