மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதனால், 2ம் நாளாக நேற்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர்.
பழமை வாய்ந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்நிலையில், மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் பாதையில் ஹில்குரோவ்- ரன்னிமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் திடீரென மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் தண்டவாளத்தில் பெரிய பாறைகற்கள் உருண்டு விழுந்தன.
இதனால், ரயில் பாதையில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 7.10 மணிக்கு 184 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் இடையில் கல்லாறு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மண் சரிவு காரணமாக குன்னூரை நோக்கி செல்ல முடியாததால், மீண்டும் மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்ப கொண்டு வரப்பட்டது.
இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரயில் பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. மண் சரிவு காரணமாக ரயில்வே உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குன்னூர் மலை ரயில் இருப்பு பாதை இளநிலை பொறியாளர் தலைமையில் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் பாதையில் விழுந்து கிடந்த பெரிய ராட்சத பாறையை கம்ப்ரஸர் மூலம் துளையிட்டு வெடி வைத்து தகர்த்தனர். ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இதனால், 2ம் நாளாக நேற்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
The post வெடி வைத்து ராட்சத பாறைகள் தகர்ப்பு; மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் 2வது நாளாக ரத்து appeared first on Dinakaran.