கொடைக்கானலில் பிரபலமாகும் புது ஸ்பாட் பாதுகாப்பு வசதி செய்ததும் பெப்பர் அருவிக்கு அனுமதி: கலெக்டர் தகவல்

18 hours ago 3

கொடைக்கானல்: கொடைக்கானல் பெப்பர் அருவி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சாகச சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சிலர் அதிகம் யாரும் செல்லாத இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள்.

அந்த வகையில் கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது பெப்பர் அருவி. முற்றிலும் மலைப்பாங்கான இடமான இப்பகுதிக்கு ஜீப் சவாரி மூலம் சுற்றுலாப்பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். ஜீப்பும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று விடும்.அங்கிருந்து சுமார் 1 கிமீ தூரம் நடந்து சென்று இந்த பெப்பர் அருவியை கண்டு ரசித்து வருகின்றனர். இரு மலைகளுக்கு நடுவே தண்ணீர் கொட்டும் அழகை காண கடந்த சில மாதங்களாக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு படையெடுத்து வருகின்றனர்.

இவர்கள் பாதுகாப்பற்ற முறையில் அழைத்து செல்லப்படுவதாகவும், நுழைவு கட்டணமாக சிலர் ஒரு நபருக்கு ரூ.100 வசூலித்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து கலெக்டர் சரவணன், அனைத்து துறை அலுவலர்களுடன் பெப்பர் அருவியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர் கூறுகையில், ‘‘பெப்பர் அருவிக்கு செல்ல யாரும் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

விரைவில் இப்பகுதி முழுவதையும் அரசு கையகப்படுத்தி சுற்றுலாத்துறை சார்பாக மேம்பாட்டு பணிகள் செய்யப்படும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின் பெப்பர் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வித்தியாசமான இயற்கையை அனுபவிப்பதற்காக வருகின்றனர். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லாதவாறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார்.

The post கொடைக்கானலில் பிரபலமாகும் புது ஸ்பாட் பாதுகாப்பு வசதி செய்ததும் பெப்பர் அருவிக்கு அனுமதி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article