சிதம்பரம், டிச. 3: சிதம்பர வழியாக செல்லக்கூடிய 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், ரயில் நிலையம் நேற்று காலை முதல் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாக செல்லக்கூடிய 3 ரயில்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும், விக்கிரவாண்டி ரயில் நிலையத்திற்கும் இடையே பாலம் எண் 452ல் கனமழையின் காரணமாக, அதிக அளவு மழை தண்ணீர் தண்டவாளம் உள்ள பாலத்தின் கீழே செல்வதால் நேற்று கடலூர்,
சிதம்பரம் வழியாக செல்லும் ரயில்கள், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் அதிவேக ரயில், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் அதிவேக ரயில், கோயம்புத்தூரில் இருந்து தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தியா செல்லும் அதிவிரைவு ரயில் சுமார் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில் புறப்பட்டு சென்றது.
The post சிதம்பரம் வழியாக செல்லும் 3 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.