சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்: படம் பிடித்த விசிக நிர்வாகி மீது தாக்குதல்

3 months ago 23

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை சகஜானந்தா தெருவை சேர்ந்தவர் இளையராஜா (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளர். இவர் நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோயிலில் உள்ள கீழ சன்னதி வழியாக கோயிலுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு ஆயிரங்கால் மண்டபம் அருகே ஒரு திடலில் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதை பார்த்த இளையராஜா, தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். உடனே தீட்சிதர்கள், வீடியோவை அழிக்காவிட்டால் செல்போனை உடைத்து விடுவோம் என்று கூறி, இளையராஜாவின் கையை பிடித்து முறுக்கி தாக்கி செல்போனை பிடுங்கி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இளையராஜா புகார் அளித்தார். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடராஜர் கோயில் தீட்சிதர்களை உடனே கைது செய்ய வேண்டும், பக்தர்களையும் பொதுமக்களையும் அவதூறாக பேசி வரும் தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், கோயில் தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்: படம் பிடித்த விசிக நிர்வாகி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article