சிதம்பரம் என்றவுடன் ரகசியம் என்ற சொல்லும் உடனே நினைவுக்கு வராமல் போகாது. ஆனால், சிதம்பர ரகசியம் என்ன என்று கேட்டால் பல பதில்கள் வரும். சிதம்பரம் கோயிலும், அதன் புவியியல், கட்டிட அமைப்பு, அறிவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களை பெரும்பாலான மக்கள் சிதம்பர ரகசியம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலரோ சிதம்பரம் கோயிலுக்குள் யாருக்கும் தெரியாத விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் இருப்பதாகவும் அவையே சிதம்பர ரகசியம் என்றும் கூறுகின்றனர். இந்த வரிசையில் நடராஜர் கோயில் நிலங்களை தீட்சிதர்களை விற்பனை செய்த ரகசியத்தை ஆதாரங்களுடன் ஐகோர்ட்டில் தமிழக அரசு அம்பலப்படுத்தி உள்ளது.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை, கோயில் தீட்சிதர்கள் ஏற்று நிர்வகித்து வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் சரியாக காண்பிக்கவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்களை தீட்சிதர்கள் மதிப்பதில்லை. கோயில் கணக்கு வழக்குகளில் முறைகேடு உள்ளது. கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிப்பில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
திருவிழா நேரங்களில் கோயில் கனகசபை மீது பக்தர்களை ஏற்றாமல் இருப்பது, தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்வது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து அதுகுறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை பொது தீட்சிதர்கள், முறையாக பராமரிக்கவில்லை என்பதால் அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும்.
இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளேன். அந்த புகார் கடலூர் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் விசாரணை கூட்டம் கூட்டிய போதும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாகவும் கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு செலவு கணக்கு புத்தகங்களைத் தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். கோயிலுக்குச் சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் கோயிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறநிலையத்துறை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கக் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 5ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு கடந்த 24ம் தேதி மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறையினர் சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஒரு அறிக்கை ஆதாரங்களுடன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் நிலங்கள் இருந்தாலும், வேறு சில மாவட்டங்களிலும் இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கிறது. இந்த நிலங்களில் சிலவற்றைதான் தீட்சிதர்கள் விற்று விட்டதாக தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 09.03.1976ம் ஆண்டு சிறப்பு தாசில்தார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி 23.8.1979ல் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் 295.93 ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டு, ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 215.65 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
இதன்மூலம் 506.97 ஏக்கர் நிலம் தற்போது சிறப்பு தாசில்தாரிடம் உள்ளது. தற்போது கோயிலுக்கும் சொந்தமாக 3,489.58 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நஞ்சை நிலம் 2,594.40 ஏக்கரும், புஞ்சை நிலம் 895.18 ஏக்கரும் உள்ளது. கோயிலுக்கு நிலத்தை தானமாக எழுதி கொடுத்தவர்களின் வாரிசுகள் வசம் உள்ள 1,267.09 ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் கோயிலுக்கும், தர்ம காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மீதமுள்ள 271.97 ஏக்கர் நிலங்களின் மூலமாக கிடைக்கும் வருமானம் கோயிலுக்கு செலுத்தப்படுவதில்லை. எழுதி வைத்தவர்களின் வாரிசுகளே அந்த சொத்துகளை அனுபவித்து வருகின்றனர்.
சிதம்பரம் அறநிலையத்துறை ஆய்வாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 1984ம் ஆண்டு 113 கட்டளைகள் இருந்தன. கட்டளை நிலங்களை கட்டளைதாரர்கள் நிர்வகிக்கின்றனர். இவர்கள் தீட்சிதர்களின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். அதேபோல கட்டளைதாரர்கள் கோயிலுக்கு வழங்க வேண்டிய தொகையை தீட்சிதர்கள் வசம் அளிக்கின்றனர். அதற்கு எந்த முறையான கணக்கு விவரங்களும் இல்லை. இந்த தகவலை சிறப்பு தாசில்தார் விசாரணை நடத்தியபோது கட்டளைதாரர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பதிலளிக்க தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இதுதொடர்பான வழக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் 1221 பேர் குத்தகைதாரர்களாக உள்ளனர். அவர்களிடம் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் ரூ.36 லட்சத்து 41 ஆயிரத்து 191 வசூலிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்காக மின்கட்டணம் கடந்த 8 ஆண்டுகளில் 26 லட்சத்து 29 ஆயிரத்து 763 ரூபாயை சிறப்பு தாசில்தாரே செலுத்தி உள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 18.52 ஏக்கர் நிலங்கள் கடந்த 1974, 1985 மற்றும் 1988ம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திரப்பதிவு சேத்தியாதோப்பு மற்றும் சிதம்பரம் எண். 1 இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீட்சிதர்கள் நிலத்தை விற்றது யார் யாருக்கு?
எண் ஆவணம் எண்/ ஆண்டு ஏக்கர் விற்பனை செய்தவர் வாங்கியவர்
1. சேத்தியாதோப்பு சார்பதிவாளர் அலுவலகம் எண்.117/1974 10.7. வேம்பு(எ)யாகிஷ்வரா தீட்சிதர் ஸ்ரீ ராமுலு நாயுடு
2. சேத்தியாதோப்பு சார்பதிவாளர் அலுவலகம் எண்.118/1974 1.73 வேம்பு (எ)யாகிஷ்வரா தீட்சிதர் ஸ்ரீ ராமுலு நாயுடு
3. சிதம்பரம் எண்.1 இணை சார் பதிவாளர் அலுவலகம் எண்.836/1985 2.77 ஸ்வர்ண வெங்கடேச தீட்சிதர் அண்ணாமலை பல்கலை (பதிவாளர் லட்சுமண செட்டியார்)
4. சிதம்பரம் எண்.1 இணை சார் பதிவாளர் அலுவலகம் எண்.146/1988 2.95 தில்லை நடராஜ தீட்சிதர் அண்ணாமலை பல்கலை (பதிவாளர் ராஜ மாணிக்கம்)
5. சிதம்பரம் எண்.1 இணை சார் பதிவாளர் அலுவலகம் எண்.209/1988 0.35 தில்லை நடராஜ தீட்சிதர் அண்ணாமலை பல்கலை (பதிவாளர் ராஜ மாணிக்கம்)
* கடுமையான நடவடிக்கை தேவை
சிதம்பரம் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்றதை ஆதாரங்களுடன் தமிழக அரசு அம்பலபடுத்திய நிலையில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுநல சமூக அமைப்புகள் நீதிமன்றத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன. இதேபோன்று பிரசித்தி பெற்ற பல கோயில் நிலங்களின் சொத்துக்கள் தீட்சிதர்களால் விற்கப்பட்டதா? என்ற கள ஆய்வுகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
* தமிழக அரசு நடவடிக்கைக்கு பாராட்டு
நடராஜர் கோயிலின் பல்வேறு பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த தெய்வீக பக்தர்கள் பேரவை, ஜெமினி ராதா என்கிற ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பல்லவ மன்னவர்கள், சோழர்கள், சேரர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசு என பலரும் திருப்பணிகளை செய்து இருக்கின்றனர். நடராஜர் கோயிலுக்கு பல்வேறு கால கட்டங்களில் ஏராளமான தொழிலதிபர்கள் நிலங்களை தானமாக கொடுத்திருக்கின்றனர். கோயிலின் வருவாய்க்காகவும், வளர்ச்சிக்காகவும் கொடுக்கப்பட்ட நிலங்களை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் விற்றதாக இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தீட்சிதர்கள் தங்கள் சுய லாபத்திற்காக நிலங்களை விற்றது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் துணிச்சலான இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் அரசு இந்த நிலங்களை மீட்பதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
The post சிதம்பர ரகசியம் நடராஜர் கோயில் நிலங்களை விற்ற தீட்சிதர்கள்: ஆதாரங்களுடன் ஐகோர்ட்டில் அம்பலப்படுத்திய தமிழக அரசு appeared first on Dinakaran.