செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் செல்போன் மற்றும் லேப்டாப்களை மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றுள்ளனர். போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர், ஒரகடம், மகேந்திரா சிட்டி, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் இந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இவர்கள் சுற்றுப்புற பகுதிகளில் தங்கி உள்ளனர். இந்நிலையில், சிங்கபெருமாள்கோவில் அருகே மேட்டுத் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாடகை எடுத்து வாலிபர்கள் வசித்து வந்தனர். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து 6 செல்போன் மற்றும் இரண்டு லேப்டாப்புகளை திருடிவிட்டு சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து, மறுநாள் காலை வீட்டில் இருந்த வாலிபர்கள் எழுந்து பார்த்தபோது அறையில் இருந்த 6 செல்போன் மற்றும் இரண்டு லேப்டாப்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பளங்கள் அதிகரிக்கும் நிலையில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சிங்கபெருமாள் கோவில் அருகே பரபரப்பு அடுக்குமாடி குடியிருப்பில் செல்போன், லேப்டாப் திருட்டு: சிசிடிவி பதிவு மூலம் ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.