
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஸ்டேட்டன் ஐலேண்ட் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், அடைக்கப்பட்ட 21 வயது கைதி ஒருவர், பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வரும் மாயா ஹேயஸ் (வயது 47) என்ற பெண் பிசியோதெரபிஸ்ட்டுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
அந்த சிறுவன், 2021-ம் ஆண்டு, புரூக்வுட் வாலிபர்களுக்கான மையம் என்ற பெயரிலான இந்த காவல் மையத்திற்கு 17 வயது சிறுவனாக இருக்கும்போது கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அப்போது அந்த சிறுவனுக்கு ஹேயஸ் தனியாக கவுன்சிலிங் வழங்குவதற்காக பல முறை சென்றுள்ளார்.
3 மாதங்களுக்கு பின்னர், சிறுவனை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்த தொடங்கியுள்ளார். இதுபற்றி அந்த சிறுவன் அளித்த புகாரில், இந்த பாலியல் துன்புறுத்தல் சில மாதங்களாக தொடர்ந்து நடந்தது. 30-க்கும் மேற்பட்ட முறை கவுன்சிலிங் என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்தது.
கவுன்சிலிங் வழங்குபவர் என்ற தன்னுடைய பதவியையும், செல்வாக்கையும் பயன்படுத்தி, தெரபி மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் ஒரு பகுதியே இது என கூறி சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுவனின் நிலையை பயன்படுத்தி கொண்டு, பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது அந்த மையத்தில் உள்ள பணியாளர்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஹேயசுடனான ஆலோசனை கூட்டங்களை பற்றி அவர்கள் விமர்சித்து நகைச்சுவைகளையும் பகிர்ந்து கொண்டனர். ஹேயஸை, பெரிய கால் என்று குறிப்பிட்டு உள்ளனர். எனினும், அவரை எதற்காக அவர்கள் அப்படி அழைத்தனர் என்பது தெரியவில்லை.
இதுதவிர, சிறுவனின் பெற்றோரிடம் 100 அமெரிக்க டாலர் அனுப்பும்படியும் ஹேயஸ் கூறியிருக்கிறார். அது சிறுவனுக்கு தேவையான உணவு மற்றும் ஆரோக்கிய உணவுகளுக்கான செலவுக்கு அவசியம் என கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரலில் நியூயார்க் போலீசார் ஹேயஸை கைது செய்தனர். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவானது. எனினும், குற்றம் எதுவும் செய்யவில்லை என அவர் கூறினார். இதன் தொடர்ச்சியாக அவர் விடுவிக்கப்பட்டபோதும், வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
ஹேயசுடன், அந்த மையத்தின் மற்ற பணியாளர்கள் மீதும் பாதிக்கப்பட்ட நபர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பாலியல் துன்புறுத்தல் நடந்தபோது அதனை தடுக்கவில்லை. அதனால், குறிப்பிடப்படாத பாதிப்புகள் ஏற்பட்டு விட்டன என அந்த புகார் தெரிவிக்கின்றது.