
ஐதராபாத்,
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், மற்ற அணிகள் முதல் 4 இடத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
சன்ரைசர்ஸ் அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தொடக்கம் முதலே தடுமாடியது. கருண் நாயர் (0), டு பிளெஸ்சிஸ் (3), அபிஷேக் பொரேல் (8), கே.எல்.ராகுல் (10), கேப்டன் அக்சர் படேல் (6) ஆகியோர் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால், அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து அதிரடி வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் ஓரளவு நல்ல நிலையை எட்டியது.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா இருவரும் தலா 41 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.