
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.
சென்னை அணி இதுவரை 8 லீக் ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணி தொடர் தோல்விகளை சந்திக்க பேட்டிங்கே முக்கிய காரணமாக உள்ளது. சென்னை வீரர்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த தவறுதால் ரன்கள் குவிக்க தடுமாறுகிறது.
நடப்பு தொடரில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் மீதமுள்ள 6 லீக் ஆட்டங்களிலும் கட்டாயகமாக வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், நடப்பு சீசனில் சி.எஸ்.கே மீண்டு வரும் என தோன்றவில்லை என்று சி.எஸ்.கே. முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இது மிகவும் சராசரிக்கும் கீழான பேட்டிங். மிடில் ஓவர்களில் ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கமே இல்லை. டி20 போட்டிகளில் இனியும் இப்படி விளையாடக் கூடாது. ஒரு ரன்னை எடுத்துவிட்டு அடுத்த பந்து எளிதாக வருமா என காத்திருக்கிறார்கள். இப்படி விளையாட கூடாது.
அதிரடி ஆட்டம் ஆட வேண்டும் என்ற நோக்கம் இருந்ததாகவே எனக்குத் தோன்றவில்லை. அடுத்து வரும் போட்டிகளில் சி.எஸ்.கே அணி நிச்சயம் முன்னேற வேண்டும். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டு வரும் என எனக்குத் தோன்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.