பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியில் 36 வயது பெண் வசித்து வருகிறார். அவர், பனசங்கரி, 2-வது ஸ்டேஜ் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். பெண்ணின் அருகில் சென்றதும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்றார்.
இந்தநிலையில் வாலிபரின் இந்த செயல் காரணமாக அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் பதிவெண்ணையும் அவர் குறித்து வைத்து கொண்டார். பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றி போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.
அத்துடன் வாலிபரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணையும் போலீசாரிடம் அவர் வழங்கினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடிவந்தனர். இந்த நிலையில், பனசங்கரி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அசாம் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமுத்தீன் (வயது 31) என்பவரை கைது செய்துள்ளனர். அந்த பெண் தனியாக நடந்து சென்றதால், அவருக்கு இஸ்லாமுத்தீன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.