அண்ணா நகர்: சாலையில் செல்போனில் பேசிக் கொண்டு நடந்து செல்லும் இளம்பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை நொளம்பூர் பகுதியில் கடந்த 25ம் தேதி இரவு 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி வீட்டிற்கு செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த வாலிபர் திடீரென்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கடும் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி கூச்சலிட்டுள்ளார். பொதுமக்கள் வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் பைக்கில் தப்பிவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து, சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரின் அடையாளம் தெரிந்தது.
பைக்கின் நம்பரை ஆய்வு செய்தபோது, நீலாங்கரை பகுதி என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நீலாங்கரைக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் நெற்குன்றம் பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. நேற்று மாலை போலீசார் நெற்குன்றம் பகுதிக்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தனர். அந்த வாலிபர் பைக்கில் வருவதை கண்ட போலீசார் பைக் எண்ணை அடையாளம் கண்டு, சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் நொளம்பூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், நீலாங்கரை பகுதியை சேர்ந்த சரத்பாபு (30), இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் உள்ள அனைத்து தனியார் வங்கிகளிலும் கலெக்ஷன் ஊழியராக பணிபுரிந்து வருவதும், குடும்ப பிரச்னையில் நெற்குன்றம் பகுதியில் உள்ள சித்தி வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. கைதான சரத்பாபு அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எழும்பூர் பகுதியில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்து பிறகு மீண்டும் வேறு ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பினேன். போலீசார் எப்படியும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து மீண்டும், மீண்டும் வேலைக்கு செல்லும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன்.
குறிப்பாக செல்போனில் தன்னை மறந்து பேசிக்கொண்டு நடந்து செல்லும் பல இளம்பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றுவிடுவேன்.இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து சரத்பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post சாலையில் செல்போனில் பேசியபடி செல்லும் இளம்பெண்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது : பைக் பறிமுதல் appeared first on Dinakaran.