*மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கடலூர் : கடலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டால் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல், கோ சாலைக்கு அனுப்பப்படும், என மாநகராட்சி ஆணையர் அனு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு நேற்று கடலூரில் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் மாநகராட்சியில் தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு காயம் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் சாலையில் சுற்றித் திரியும் கறவை மாடுகளை பிடித்து. பாபு கலையரங்கத்தில் வைத்து விட்டு மாலை ஆனவுடன் மாடுகளின் உரிமையாளர்கள் வரும்போது, குறிப்பிட்ட தொகையை அபராதமாக விதித்து விட்டு மாடுகளை அவர்களிடம் ஒப்படைத்து வருகிறோம்.
ஆனால் தற்போது அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிவதாக கூடுதலாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை வீடுகளிலேயே கொட்டகை அமைத்து வளர்க்க வேண்டும். பொது இடங்களில் மாடுகளை மேய விடுவதால் நிறைய விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு காயம் ஏற்படுகிறது.
இதுவரை மாடு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கெடக்கூடாது என்ற எண்ணத்தால் மாடுகளைப் பிடித்து வைத்து, உணவு அளித்து மாலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வந்தோம். இனி வரும் காலங்களில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டால் அவைகள் அனைத்தும் கோ சாலைக்கு அனுப்பப்படும். மாடுகள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படாது. எனவே மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.
தலையில் கொம்பு அணிந்து மனு அளிக்க வந்த கவுன்சிலர்
இந்நிலையில், கடலூர் மாநகராட்சி 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் பரணி முருகன், தனது தலையில் கொம்பு அணிந்து கொண்டு தங்கள் பகுதி பொதுமக்களுடன் கடலூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.
கடலூர் மாநகராட்சி 32வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் வார்டில் உள்ள தெருக்களில் காலை, மாலை மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும் மாடுகள் சுற்றி திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், மாடு முட்டி ஆறு வயது சிறுவன் காயமடைந்தான்.
இதே போல கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஒரு பெண்மணியும் காயம் அடைந்தார். இந்த மாடுகள் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வருகின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டால் ஒப்படைக்கப்படாது appeared first on Dinakaran.