திருச்சி: இந்தியா- பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது வரவேற்கத்தக்கது என்றாலும், புரியாத புதிராக உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தக்க பதிலடி கொடுத்தது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள், அரசியல், மதம்பார்க்காமல் இந்தியர்கள் என்ற அடையாளத்தோடு முழுஆதரவை வழங்கியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் தொடங்க கூடாது என நினைத்ேதாம். ஆனால் போர் தொடங்கியது. தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்றாலும் புரியாத புதிராகவே உள்ளது.
இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும். போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஆனால் நிரந்தர தீர்வு தேவை, இரண்டு நாடு இடையே சுமூகமான பேச்சுவார்த்தை தேவை. ஒட்டு மொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.
பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, போர் தொடர்ந்தால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இல்லாமல் போகும் என்று தெரிவித்திருந்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை இந்தியாவுடன் இணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்கும் செயல்பாட்டில் பாஜ செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் அண்ணாமலை கூறுகிறார். இது சாத்தியமில்லாத ஒன்று. காஷ்மீர் போன்ற எல்லையோர பகுதியில் உள்ள மக்கள் அமைதியை விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூட்டணியில் விசிக ெதாடருமா என கேட்டதற்கு, திமுகவும், விசிகவும் ஒன்றாகத்தான் உள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. பாமக திமுகவில் இணைந்தால், அந்த கூட்டணி அமைந்தால் அதை அப்போது பார்த்து கொள்ளலாம் என்று திருமாவளவன் கூறினார்.
The post இந்தியா-பாக். போர் முடிவு புரியாத புதிராக உள்ளது: திருமாவளவன் டவுட் appeared first on Dinakaran.