நெல்லை: திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான நாராயணசாமி நேற்று நெல்லை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாடு தற்போது பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. பஹல்காம் சம்பவத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் மிகப்பெரிய துயரமாகும். பிரதமர் உத்தரவுப்படி பாகிஸ்தான் மீது போர் தொடுத்து பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. கட்சி பாகுபாடு இல்லாமல் காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்படுகிறது.
இந்தியாவில் குழப்பங்கள் ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. தீவிரவாதம் எங்கும் இருக்கக் கூடாது. அதனை வேரறுக்க வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த போது சம்பவ இடத்தில் காவல்துறை, ராணுவம் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருந்தது உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளதை காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post தீவிரவாதம் எங்குமே இருக்க கூடாது வேரறுக்க வேண்டும்: நாராயணசாமி பேட்டி appeared first on Dinakaran.