திருச்சியில் பிரமாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் ஜூன் முதல் வாரத்தில் இயங்கும்: கலெக்டர் தகவல்

1 day ago 2

ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான நவீன கட்டிட அமைப்புடன், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.

திருச்சி: திருச்சியில் பிரமாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் ஜூன் முதல் வாரத்தில் முழுமையாக இயங்கும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408 கோடி திட்ட மதிப்பீட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான நவீன கட்டிட அமைப்புடன், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி’ ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என்று பெயர் சூடப்பட்டது. இதை கடந்த 9ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்த வைத்தார்.

இந்த பேருந்து முனையத்துக்கு இரண்டு முகப்பு வாசல்கள் உள்ளன. இங்கு வெளியூர் செல்லும் பஸ்கள் தரை தளத்திலிருந்தும், நகர பேருந்துகள் முதல் தளத்திலிருந்தும் இயக்கப்படும். நெடுந்தூரம், குறைந்த தூர பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் என மொத்தம் 401 பஸ்களை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 1.20 லட்சம் சதுரஅடி பரப்பளவு உள்ள தரைத்தளம் முழுவதும் விமான நிலையம் போல், பால்சீலிங் செய்து 704 டன் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து முனையம் ஜூன் முதல் வாரத்தில் இருந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கூறுகையில், ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. அடுத்த 10-15 நாட்களுக்குள், அதாவது, ஜூன் மாத முதல் வாரத்தில் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடம், நேரம் ஒதுக்குதல் தொடர்பாக போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து கலந்தாலோசணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. பேருந்து முனையம் குறித்து அரசிதழில் வெளியிட வேண்டியுள்ளது. பஸ் முனையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு 3 தினங்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். முக்கியமாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள், பஞ்சப்பூர் பஸ் நிலையத்திற்கு வந்து விடும். அரியலூர், பெரம்பலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையத்திலேயே இயங்கும்,’’என்றார்.

மாவட்ட, நகர பேருந்துகள் வழித்தடங்கள் மாற்றம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் பஞ்சப்பூருக்கு மாற்றப்படுவதால், மக்கள் எளிதாக மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்ல வசதியாக நகர மற்றும் மாவட்ட பேருந்துகள் வழித்தடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்ட பேருந்துகள், நகர பேருந்துகள் போன்றவற்றின் வழித்தடங்கள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் 7.5 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு நகர பேருந்துகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிப்பது, புறநகர் பேருந்துகளுக்கு கூடுல் கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையாக வழித்தடங்கள் மாற்றப்பட்டு எந்தெந்த பேருந்துகள் இந்த முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்பது உள்ளிட்ட முழு அறிக்கையும் அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அனுமதி பெறப்பட்ட பின்னர் இந்த வழித்தடங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்படும்’ என்றனர்.

பாராட்டாமல் இருக்க முடியாது
பயணி குமார் கூறுகையில், ‘இதுவரை தமிழ்நாட்டில் கோயம்பேடு மார்க்கெட் மட்டுமே பிரமாண்டமானதாக இருந்தது. அதை மிஞ்சும் வகையில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை திருச்சியை தவிர எந்த பஸ் நிலையத்திலும் எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இது மிக புதுமையாக உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதையும், அதற்காக அரசு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும் இது காட்டுகிறது. நவீன யூகத்தின் அனைத்து வசதிகளும் சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.

‘எல்லோர்க்கும் எல்லாமும்’ கனவு நினைவாகி வருகிறது
குடும்ப தலைவி ரீனா கூறுகையில், ‘வாவ்…,’ என்ற ஒற்றை வரியில் முடித்துவிட முடியாது. இது பஸ் நிலையமா? விமான நிலையமா?, நம்ம ஊரில் தான் உள்ளோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தியாவிலேயே இதுபோன்ற பஸ் முனையத்தை பார்க்க முடியாது. சாதாரண மக்களையும் நவ, நாகரிக உலகத்துக்கு அழைத்து செல்வதாய் உள்ளது. ஆட்சியாளர்கள் கூறுவது போன்று ‘எல்லோர்க்கும் எல்லாமும்’ என்ற கனவு நினைவாகி வருகிறது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் உலகத்தரத்திலான பஸ் முனையத்துக்கு வழி வகுத்த அரசுக்கு ஒரு சல்யூட் என்றார் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க.

ஆச்சரியமூட்டும் வசதிகள் முதல்வருக்கு நன்றி
தனியார் நிறுவன ஊழியர் மோகனப்பிரியா கூறுகையில், ‘பேருந்து முனையம் வெளியில் இருந்து பார்க்கும் போதே பிரமாண்டமாக தெரிந்தது. உள்ளே சென்று பார்க்கும் போது, இவ்வளவு வசதிகள் உள்ளனவா என ஆச்சரியமாக உள்ளது. நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு பிரமாண்டமான ஒரு பஸ் நிலையம் நம் ஊரில் இருப்பது பெருமையாக உள்ளது. மிகுந்த நேர்த்தியுடன் பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பொருட் செலவில் மக்களுக்கு இந்த பஸ் ஸ்டாண்டை அர்ப்பணித்துள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி என்றார்.

எந்தெந்த பஸ் எந்தெந்த நடைமேடைகளில்…
1 நடை மேடை: திருப்பதி, (தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்து கழகம்), பெங்களூரு (கர்நாடக அரசு போக்குவரத்துக்கழகம்).
2 நடை மேடை: சென்னை (மாதவரம்), சென்னை (கிளாம்பாக்கம்).
3 நடை மேடை: விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருத்தணி,
புதுச்சேரி, கடலூர், நெய்வேலி.
4 நடை மேடை: கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, ஊட்டி, மேட்டுப்பாளையம், திருப்பூர், முசிறி, தோகைமலை, பாளையம் மற்றும் குளித்தலை.
5 நடை மேடை: மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், குமுளி, கொடைக்கானல், பொள்ளாச்சி, பழனி, மணப்பாறை, திருச்செந்தார், நாகர்கோவில், சிவகாசி, கோவில்பட்டி, செங்கோட்டை, துவரங்குறிச்சி, பொன்னமராவதி.
6 நடை மேடை: ராமேஸ்வரம், ராமநாதபுரம், தொண்டி, தேவகோட்டை, பரமக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், அன்னவாசல், இலுப்பூர், பட்டுக்கோட்டை, பொன்னமராவதி, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி, புதுக்கோட்டை.
7 நடை மேடை: வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், நாகூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், கும்பகோணம்.
8 நடை மேடை: தஞ்சாவூர் (நான்-ஸ்டாப் பஸ்), தஞ்சாவூர் (சாதாரண பஸ்), கும்பகோணம்.

The post திருச்சியில் பிரமாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் ஜூன் முதல் வாரத்தில் இயங்கும்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article