சாலையில் கிடந்த தாலி சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்: நெல்லை எஸ்.பி. பாராட்டு

1 week ago 6

நெல்லை மாவட்டம், நாங்குநேரி, தேரடி தெருவில் உள்ள தேர் அருகே கீழபத்தனேரியை சேர்ந்த வேல்முருகன் (வயது 38), சென்று கொண்டிருந்தபோது கீழே 10 கிராம் தங்க தாலி சங்கிலி கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனை எடுத்து உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு சென்று நேர்மையான முறையில் ஒப்படைத்தார்.

பின்னர் நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது விசாரணை மேற்கொண்டதில், தங்க தாலியின் உரிமையாளர் நாங்குநேரியை சேர்ந்த சுபா (வயது 31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை நாங்குநேரி காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்தார். பின்னர் உரிய முறையில் தங்க தாலியை இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, வேல்முருகன் மூலமாக சுபாவிடம் ஒப்படைத்தார்.

இதேபோல் நெல்லை மாவட்டம், பணகுடி, தளவாய்புரத்தைச் சேர்ந்த நல்லையா மகன் எட்வின் (வயது 40), தளவாய்புரம் மெயின் ரோடு அருகே நின்று கொண்டிருந்தபோது 20 ஆயிரம் பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனை எடுத்து உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று நேர்மையான முறையில் ஒப்படைத்தார்.

பின்னர் பணகுடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரணை மேற்கொண்டதில் பணத்தின் உரிமையாளர் தளவாய்புரத்தைச் சேர்ந்த லீலாவதி (வயது 50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பணகுடி காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்தார். பின் உரிய முறையில் பணத்தை இன்ஸ்பெக்டர் ராஜாராம், எட்வின் மூலமாக லீலாவதியிடம் ஒப்படைத்தார்.

மேற்சொன்ன சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், வேல்முருகன், எட்வின் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து அவர்களுடைய நேர்மையை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்ததோடு, பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

Read Entire Article