பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தண்டேல். இப்படத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம், வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
கடந்த 30-ந் தேதி இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் சிறப்பு விருந்தினராக கார்த்தி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மும்பையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால் இதில் நடிகை சாய் பல்லவி கலந்துகொள்ளவில்லை. சாய்பல்லவி விழாவுக்கு வராதது குறித்து படத்தின் இயக்குனர் சந்து மொண்டேட்டி கூறுகையில், "நடிகை சாய் பல்லவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையால் அவதிப்படுகிறார். அதையும் பொருட்படுத்தாமல் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இதனால் சோர்வடைந்த அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.