சென்னை,
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார். தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில், டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
2025-ம் ஆண்டின் டாடா ஸ்டீல்ஸ்-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. இத்தகைய மதிப்புமிக்க நிகழ்வில் பெற்ற வெற்றி அவருடைய திறமை மற்றும் உறுதிப்பாட்டின் உண்மையான பிரதிபலிப்பாகும்.
பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட வீரர்களாக இருப்பதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. அவர்களின் வெற்றியால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவர்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.