சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க.: 'மாஸ்டர் பிளான்' இதுதான்!

3 hours ago 1

சென்னை,

பொதுவாக தேர்வு வந்தால் மாணாக்கர்களுக்கும், தேர்தல் வந்தால் அரசியல்வாதிகளுக்கும் சற்று கலக்கம் ஏற்படுவது இயல்பு. அந்த நேரத்தில், பாடங்களை முழுமையாக படித்தோமா? என்று மாணாக்கர்களும், மக்கள் மனங்களை தெளிவாக புரிந்தோமா? என்று அரசியல்வாதிகளும் எண்ணிப்பார்ப்பது உண்டு.பாடங்களை நன்றாக படித்த மாணாக்கர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவார். மக்களின் மனம் கவர்ந்த அரசியல் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை பிடிப்பார்.

ஆனால், இப்போது மக்களின் மனங்களை எடைபோட்டு கணிப்பது என்பது சாதாரணமான காரியமாக இல்லை. இப்போதைய சமூக வலைதள காலத்தில் மக்களின் மனங்களும் ஈ.சி.ஜி. ரிப்போர்ட்டை போல் ஏற்ற, இறக்கத்துடன் மாறிக் கொண்டே இருக்கின்றன.அதனால், இப்போது மக்களின் மனநிலைகளை அறிய அரசியல்கட்சியினர் , தேர்தல் யுக்திகளை வகுத்துக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களை நாடிச்செல்ல தொடங்கி இருக்கின்றனர்.அந்த வகையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு வசதியாக, பிரசார யுக்திகளை வகுத்து கொடுக்க ராபின் சர்மாவின் 'ஷோ டைம் கன்சல்டன்சி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ஏற்கனவே, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான 'ஐபேக் நிறுவனம்' பணியாற்றியது. அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க.வுக்கு 'பென் டீம்' தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தது. இந்த சூழ்நிலையில்தான், 2026 சட்டசபை தேர்தலுக்கு ராபின் சர்மா நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தினர் கடந்த மாதம் முதல் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் தங்களது களப்பணியை தொடங்கியுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பு என்ன?, ஒவ்வொரு தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே தி.மு.க.வின் 2026 சட்டசபை தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த ராபின் சர்மா குழுவினர் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் கட்சி தலைமைக்கு அறிக்கை அளிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. தொகுதி மக்களிடம் உள்ள மதிப்பை முன்னிறுத்தியே தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு இருக்குமாம். இந்தப் பணிகளுக்காக ராபின் சர்மா நிறுவனத்துக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை தி.மு.க. தலைமையிடம் இருந்து கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்த ராபின் சர்மா நிறுவனம் தான் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இதேபோல், மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சிக்கும், மராட்டியத்தில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கும் தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே இருந்த பென் டீம், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. "யார் அந்த சார்?" பிரச்சினையை கிளப்பியபோது, முறையாக அதை கையாளவில்லை என்று தி.மு.க. தலைமை கருதியதால், ராபின் சர்மா குழு களம் இறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க.வின் 'மாஸ்டர் பிளான்' எடுபடுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Read Entire Article