புதுடெல்லி,
மக்களவையில் ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே இந்த முறையும் ஜனாதிபதி உரையில் கிட்டத்தட்டக் கேட்டேன். ஜனாதிபதி உரையில் எந்த முக்கியமான அம்சமும் இல்லை. ஜனாதிபதி உரை இப்படி இருக்கக்கூடாது.
இந்தியாவின் உற்பத்தி விழுக்காடு, கடந்த 10 ஆண்டுகளில் 15.3% லிருந்து 12.6% ஆக குறைந்துள்ளது. இதற்கு நான் பிரதமரை விமர்சிக்கவில்லை. ஆனால், பிரதமரின் ஆட்சி தோல்வி கண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாட்டின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார். இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4,000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது. நம் நாட்டில் நுகர்வோர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்; ஆனால் உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.