
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலிங் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - சாய் சுதர்சன் களமிறங்கினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சாய் சுதர்சன் 52 ரன்களில் (36 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் சதத்தை நோக்கி வெகுவாக முன்னேறிய கில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திவேட்டியா டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
இறுதி கட்டத்தில் பட்லர் (41 ரன்கள்) தனி ஆளாக போராடி அணி வலுவான நிலையை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா மற்றும் ரசல் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்க உள்ளது.