
மும்பை,
நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 3 மாபெரும் சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. அவை விவரம் பின்வருமாறு:-
1. விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 285 இன்னிங்ஸ்களில் விளையாடி அதில் 13963 ரன்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் இன்னும் 37 ரன்கள் அடித்தால் 14000 ரன்களை கடந்த 3-வது வீரராக சாதனை படைப்பார்.
மேலும் 14000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைப்பார். இதற்கு முன்னர் சச்சின் தனது 350-வது இன்னிங்சில் 14000 ரன்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. அவருக்கு அடுத்து இலங்கையின் குமார் சங்ககரா 378 இன்னிங்ஸ்களில் 14000 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையில் விராட் கோலி முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
2. சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 529 ரன்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் 173 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார். இந்த சாதனையில் ஷிகர் தவான் 701 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
3. சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 529 ரன்கள் அடித்துள்ள விராட், இந்த தொடரில் இன்னும் 263 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.