சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்திற்கு எதிராக எங்களுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் கில் பேட்டி

21 hours ago 2

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதில் துபாயில் நேற்று நடந்த 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஹிரிடாயின் அபார சதத்தின் உதவியுடன் கவுரமான நிலையை எட்டியது. 49.4 ஓவர்கள் விளையாடிய வங்காளதேச அணி 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்நிலையில் சேசிங் செய்வதற்கு பிட்ச் கடினமாக இருந்ததாக கில் தெரிவித்துள்ளார். எனவே அதை எட்டுவதற்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் சேர்ந்து திட்டங்கள் வகுத்ததாக கில் கூறியுள்ளார்.

இது குறித்து போட்டியின் முடிவில் அளித்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இது நான் விளையாடிய திருப்திகரமான இன்னிங்ஸ்களில் ஒன்று. ஐ.சி.சி. தொடரில் இது என்னுடைய முதல் சதம். அந்த வகையில் நான் செயல்பட்ட விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. நானும் ரோகித் பாயும் களத்திற்கு சென்றபோது பந்தை கட் ஷாட் வாயிலாக அடிப்பது கடினம் என்று பேசினோம். ஏனெனில் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகள் அடிப்பதற்கு நன்றாக வரவில்லை. எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் இறங்கி சென்று வட்டத்திற்கு வெளியே அடிக்க முயற்சித்தேன்.

சுழற்பந்து வீச்சாளர்கள் வந்தபோது முன்னங்காலில் (பிரண்ட் புட்) சிங்கிள் எடுப்பது கூட கடினம் என்று நானும் விராட் கோலியும் பேசினோம். அதனால் பின்னங்காலில் (பேக் புட்) சிங்கிள்களை எடுக்க முயற்சித்தோம். நேராக அடிப்பதும் கடினமாக இருந்ததால் ஸ்ட்ரைக்கை மாற்ற முயற்சித்தோம். ஒரு கட்டத்தில் கடினமாக இருந்ததால் கடைசி வரை நின்று நான் விளையாட வேண்டும் என்று எனக்கு வெளியில் இருந்து மெசேஜ் வந்தது. முதல் சிக்சர் அடித்தது எனக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தது" என்று கூறினார்.

Read Entire Article