50 ஓவர் கிரிக்கெட்: அவரை தாண்டி சிறந்த வீரரை நான் பார்த்ததில்லை - பாண்டிங் பாராட்டு

2 hours ago 1

சிட்னி,

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வந்த அவர் இந்த முக்கியான போட்டியில் சதத்தை அடித்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இதனால் விராட் கோலியை பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாரட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி போன்று சிறந்த வீரரை தான் பார்த்தது இல்லை என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "பெரிய போட்டிகளுக்கு சமமான வீரர்கள் வேண்டும் என்று நான் எப்போதும் சொல்வேன். அழுத்தமான நேரத்தில் அசத்தக்கூடிய பெரிய வீரர் தேவை. இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை விட பெரிய போட்டி இல்லை. சர்வதேச போட்டிகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். எனவே கோலி சிறப்பாக விளையாடியதில் எனக்கு ஆச்சரியம் இல்லை.

இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததை விட அவர்களுக்கு சாதகமான விஷயம் கிடையாது. எனவே அந்த போட்டியை வெல்வதற்கு டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அதனை விராட் கோலி மீண்டும் செய்து முடித்தார்.

விராட் கோலி நீண்ட காலமாக கிரிக்கெட்டில் சாம்பியன் வீரராக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தலை சிறந்தவராக இருக்கிறார். விராட் கோலியை தாண்டி 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரரை நான் பார்த்ததில்லை. தற்போது இந்த வடிவத்தில் என்னையும் தாண்டி மேலே சென்று விட்டார். இந்த வடிவத்தில் அதிக ரன் குவித்த வீரராக அவர் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார். 

Read Entire Article