மும்பை,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் சிராஜ் இடம் பெறாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் அந்த அணியில் ஜடேஜா, அக்சர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை விளையாட உள்ள துபாயில் ஸ்பின்னர்களுக்கு அதிக உதவி கிடைக்காது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்சர் படேல் - ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 இடது கை ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். எனவே ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னுடைய கருத்துப்படி முகமது சிராஜ் இந்திய அணியில் இருக்க வேண்டும். அவர் யாருடைய இடத்தில் இருக்க வேண்டும் என்பதையும் நான் சொல்வேன். தற்போதைய அணியில் இரண்டு இடது கை ஸ்பின்னர்கள், ஒரு ஆப் ஸ்பின்னர் இருக்கிறார்கள். அந்த மூவரில் ஒருவரை நீங்கள் நீக்கலாம். குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவை விட்டுவிட்டு முகமது சிராஜை அவருடைய இடத்தில் தேர்வு செய்திருக்கலாம். அதை நீங்கள் செய்திருக்க வேண்டும்.
ஏனெனில் முகமது சிராஜ் அணிக்கு நிறைய மதிப்பை கொண்டு வருவார். ரவீந்திர ஜடேஜா விளையாடுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்புகளே இருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஜடேஜா விளையாடவில்லை எனில் அவருக்கு பதிலாக அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை நீங்கள் அணியில் வைத்திருக்கலாம். அந்த இடத்தில் சிராஜ் இருந்தால் அணிக்கு நிறைய பங்காற்றுவார்" என்று கூறினார்.