
ராவல்பிண்டி,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷண்டோ 77 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்துஅணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார். பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனையும் சேர்த்து நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் தொடர்களான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளில் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் வில்லியம்சன் மற்றும் நாதன் ஆஸ்ட்லே தலா 3 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.