
மும்பை,
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார். ஏனெனில் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தொடர் முழுவதிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியில் 1 முதல் 5 வரை 5 சுப்மன் கில்கள் இருக்கிறார்கள். அதாவது அந்த இடத்தில் விளையாடும் நமது அனைத்து பேட்ஸ்மேன்களும் சதத்தை அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள். அக்சர் படேல் 5வது இடத்தில் விளையாடினால் நீங்கள் இந்திய அணியில் இருக்கும் திறமையின் ஆழத்தை கற்பனை செய்து பாருங்கள்.
வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா லேசாக தடுமாறியபோது கே.எல். ராகுல் வந்தார். அதற்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் காத்திருந்தார்கள். அந்த வகையில் இந்தியா திறமையின் வீடாக இருக்கிறது. ஏனெனில் நாம் கொண்டிருக்கும் அமைப்பு மற்றும் கிரிக்கெட் விளையாடும் விதம் அப்படி இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் இந்தியா வெற்றி பெறக்கூடிய அணியாக இல்லை. இத்தொடர் முழுவதையும் அவர்கள் வெல்லும் அணியாக இருக்கிறார்கள். எனவே இந்த போட்டியில் வெற்றி பெறுவது பாகிஸ்தானுக்கு எளிதாக இருக்காது. நமது ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவார்கள். இந்தியா அதே பவுலிங் கலவையுடன் விளையாடும் என்று நம்புகிறேன். துபாயில் வெற்றி பெறுவதற்கு ஸ்பின்னர்கள் தேவை. அங்குள்ள ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்பும் என்று எனக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தான் சுழலை நன்றாக எதிர்கொள்ள மாட்டார்கள். இந்தியாவிடம் தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார்.