
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடலில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நடிகை தமன்னா பாட்டியா அவருடைய குடும்பத்துடன் வந்து புனித நீராடலில் இன்று கலந்து கொண்டார். அரண்மனை 4, பாகுபலி, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்தவரான நடிகை தமன்னா, உலகின் மிகப்பெரிய புனிதம் வாய்ந்த இறை வழிபாட்டில் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கும் உதவினார்.
இந்த சூழலில் அவர் நடிப்பில் உருவாகி வரும் ஒடேலா 2 பட டீசர் இன்று வெளியானது. இந்த படத்தில், துறவி வேடத்தில் அவர் நடித்திருக்கிறார். இதுபற்றி நடிகை தமன்னா கூறும்போது, என்னுடைய வாழ்க்கையில் ஒரேயொரு முறை கிடைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
உண்மையில் நிறைய பேரை பார்த்தேன். நாங்கள் அனைவரும் எங்களுடைய சொந்த பாதிப்புகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடனும், சுதந்திரத்துடனும் இருக்க விரும்பினோம் என்று உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
வார தொடக்கத்தில் பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். நடிகர்கள் விவேக் ஓபராய், விக்கி கவுசல், நடிகை ஜூகி சாவ்லா உள்ளிட்ட பலரும் புனித நீராடியுள்ளனர்.