காஞ்சிபுரம்,
சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாகக் கூறி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் வலியுறுத்தி இருந்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று பிற்பகல் நீதிபதிகள் பாலாஜி, அருள்முருகன் அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாக சிஐடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்களை திமுக கூட்டணி கட்சி தலைவர்களான சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதன் அடக்குமுறையையே எதிர்க்கிறோம்" என்று அவர் கூறினார்.