சென்னை: “சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய தொழிலாளர்களின் நலன் மற்றும் தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிஐடியூ அமைப்பு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (அக்.9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்சினையில், தமிழக முதல்வர் தனிப்பட்ட கவனம் செலுத்தி, ஒரு அமைச்சர் குழுவை அமைத்தார். குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் அந்த குழுவில் நியமித்திருந்தார். அமைச்சர் குழுவும் இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.