சென்னை: சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று வில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகாசி சக்தி நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கம்மாபட்டி ரவிச்சந்திரன் கடந்த 2018ம் ஆண்டு சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, நரிக்குடியைச் சேர்ந்த ஐ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கி நடத்தி வந்தார். இதன் பிறகு, 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும் தங்களின் பங்குதொகையைப் பெற்றுக் கொண்டு தொழிலில் இருந்து விலகினார்.
இந்நிலையில், கடந்த 2019 அக்டோபர் மாதம் ரவிச்சந்திரனை கடத்தி ராஜவர்மன் உள்ளிட்டோர் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுக நிர்வாகி தங்கமுனியசாமி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் ஐ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது வில்லிபுத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது வில்லிபுத்தூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2024 பிப்ரவரியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் புகார்தாரரான ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதில்லை. வழக்கு விசாரணை காலம் தாமதமாக நடக்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தன் மீதான புகாரை திரும்ப பெறும்படி தன்னை வலியுறுத்தி வருகிறார். எனவே, இந்த வழக்கு விசாரணையை உடனடியாக விசாரித்து முடிக்குமாறு வில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டவர் மீதான வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று வில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
The post சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மீதான ஆள்கடத்தல் வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.