சாத்தூர், மார்ச் 20: சாத்தூரில் புதிதாக போடப்பட்ட நடைபாதையில் பெட்டிக்கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் சூழல் நிலவுகிறது. சாத்தூரில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மெயின்ரோடு, வெம்பக்கோட்டை சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மேலும் மழை நேரத்தில் தண்ணீர் சாலையில் தேங்கி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.22 கோடி மதிப்பில் சாலையின் இரு பகுதியிலும் தளகற்கள், மழைநீர் செல்ல வாய்க்கால், பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதை அமைத்துள்ளனர். நடை பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதன்மேல் அப்பகுதியினர் பெட்டிக்கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பெட்டிக்கடைகள் நடை பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து நடை பாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பெட்டிக்கடைகளை அகற்ற வேண்டும், அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
The post சாத்தூரில் புதிதாக போட்ட நடைபாதையில் பெட்டிக்கடைகள் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.