சென்னை: அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகளை களைவது, அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, மீண்டும் ஈட்டிய விடுப்பு பலன் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மற்றொரு கோரிக்கையான ஈட்டிய விடுப்புக்கு பணப்பலன் பெறும் திட்டம் அடுத்தாண்டு ஏப்.1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.