சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்குதான் அதிகாரம் : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு

1 month ago 6

மதுரை: சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்க உறுப்பினர் சதீஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சட்டம் அரசியலமைப்பின் அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மேலும் பல ஆண்டுகளாக, இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் கணக்கெடுப்பு நடந்துள்ளது. எனவே, 2020ல் வெளியிட்ட அரசாணைப்படி, தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான் உள்ளது. இதுபோன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்குதான் அதிகாரம் : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article