சாட்டையால் அடித்துக் கொண்டவரை மதுரை பக்கம் போக சொல்லுங்கள்: அண்ணாமலை மீது முத்தரசன் தாக்கு

4 hours ago 2

முத்துப்பேட்டை: சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலையை மதுரை பக்கம் போகச்சொல்லுங்கள் என்று முத்தரசன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பாண்டி ரயில்வே கேட் அருகே நடைபெற்ற கம்யூனிஸ்ட் தியாகி பக்கிரிசாமி 15ம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சாட்டை எடுத்து அடித்துக் கொண்டவர்களும் அதேபோல் சிலம்பெடுத்து ஆடியவர்களும் இன்றைக்கு எங்கே என்று தெரியவில்லை. அவர்களை எங்காவது பத்திரிகையாளர்கள் பார்த்தால் மதுரைக்கு சென்று சாட்டையால் அடித்துக் கொள்வதற்கும், சிலம்பை எடுத்து ஆட்டுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, அவர் வந்த நாள் தொட்டு இந்த நாள் வரை ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறார். அவர் வாயைத் திறந்தாலே புதுப்புது பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆளுநர் ரவி, பேசுவது எல்லாமே அபத்தமாக உள்ளது. அவர் வகிக்கின்ற பொறுப்பு மிக உயர்ந்த பொறுப்பாகும், கண்ணியத்திற்கும் உயர்ந்த பொறுப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் முறையில் தொடர்ந்து அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை கவர்னர் பதவியே கூடாது என்பதுதான் அதனுடைய கொள்கை. இந்த ஆளுநரை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு, இவரை நியமனம் செய்த குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இவருடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சாட்டையால் அடித்துக் கொண்டவரை மதுரை பக்கம் போக சொல்லுங்கள்: அண்ணாமலை மீது முத்தரசன் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article