
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் (இத்தாலி) முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிசில் அல்காரஸ் நேர் செட்டில் சின்னரை வீழ்த்தி மகுடம் சூடியதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை அள்ளினார். இதனால் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.
இதனால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்தார். அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேக் டிராப்பர் 5-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் அரினா சபலென்கா (பெலாரஸ்) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-ல் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு அவரது மோசமான தரநிலை இதுவாகும். இதனால் அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் அதிகரித்து 2-வது இடத்தை பெற்றிருக்கிறார். ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி 4-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு) உள்ளனர்.