
சென்னை,
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 16-ந்தேதி வெளியானது. இந்த நிலையில், பிளஸ்-1 வகுப்பு படிக்காதவர்கள் கூட நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டில் சேரலாம் என்ற புதிய தேசிய கல்விக்கொள்கையின் சாராம்சத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்று வீடியோ ஒன்றை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பிளஸ்-2 வகுப்பில் கணிதம் மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளில் படித்த மாணவர்கள் மட்டுமே நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டில் சேர முடியும் என்ற விதி இருந்தது.
இந்நிலையில் பிளஸ்-2 வகுப்பை நிறைவு செய்த வணிகவியல் மற்றும் கலைப்பிரிவு உள்பட அனைத்து மாணவர்களும் நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டில் சேரலாம் என்ற தளர்வைத் தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அண்மையில் அறிவித்தது. பிளஸ்-1 வகுப்புப் படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டில் படிக்கலாம் என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிளஸ்-1 படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டில் சேரலாம் என பரவிய தகவல் போலியானது என்பது உறுதியாகியுள்ளது