ஊட்டியில் இளம்பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

4 hours ago 3

ஊட்டி,

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம்பெண்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு பரிமாறுதல் உள்பட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். திருமணம் ஆகாத அவர்கள், ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்கள் உடை மாற்றி உள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் சத்தம் போட்டனர். இதுகுறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வடமாநில இளம்பெண்கள் தங்கி இருந்த வாடகை வீட்டின் அருகில் மற்றொரு வீட்டில் வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த கிரிதரன் (வயது 35) என்பவர் இளம்பெண்களை செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். நாய்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில நாட்களாக கிரிதரன் தனது வீட்டிற்கு செல்லும் போது, ஜன்னல், கதவு வழியாக இளம்பெண்களை தொடர்ந்து நோட்டமிட்டு வந்து உள்ளார். பின்னர் அவர்கள் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கிரிதரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி, வேறு யாரையும் ஆபாச வீடியோ எடுத்து உள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article