ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

5 hours ago 3

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டபோது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை தவிர்த்து விடலாம். அடுத்த சீசனுக்கு அணியை வலுப்படுத்தும் நோக்குடன் வீரர்களை பயன்படுத்துவோம் என கேப்டன் டோனி கூறியுள்ளார். இதனால் இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

அந்த வகையில் டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் சூரர்களின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தாயகம் திரும்பிய வீரர்களில் இங்கிலாந்தை சேர்ந்த சாம் கர்ரன், ஜாமி ஓவர்டான் மறுபடியும் இந்தியா வரவில்லை. மற்றபடி சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, வேகப்பந்து வீச்சாளர் பதிரானா தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளனர். தனது கடைசி லீக்கில் கொல்கத்தாவை தோற்கடித்த சென்னை அணி 13 நாள் இடைவெளிக்கு பிறகு களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும். பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 220 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி நெருங்கி வந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த சீசனில் 9-வது ஆட்டங்களில் இலக்கை நோக்கி ஆடியதில் 8-ல் தோல்வியை சந்தித்துள்ளது. அதில் 5 ஆட்டங்களில் 11 ரன்னுக்கும் குறைவான வித்தியாசமாகும். அதாவது ஒன்றிரண்டு பெரிய ஷாட்டுகள் அடித்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். அதை செய்ய முடியாமல் போய் விட்டதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனையுடன் குறிப்பிட்டார். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (6 அரைசதத்துடன் 523 ரன்), வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரெல் உள்ளிட்டோர் கைகொடுத்தாலும் பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-20 இடங்களில் ஒரு ராஜஸ்தான் பவுலர் கூட இல்லை. எனவே பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். ஏற்கனவே லீக்கில் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்ய ஆர்வம் காட்டுகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Read Entire Article