ஜர்சுகுடா: காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கடந்த ஜனவரி 15ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘எங்கள் சித்தாந்தமானது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்பை எதிர்த்துப் போராடுகிறோம். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு பொது நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளன. அதனால் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம்’ என்று கூறினார். இதில் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம் என்று ராகுல்காந்தி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விகாரம் தொடர்பாக ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், ‘ராகுல் காந்தியின் பேச்சானது கருத்து சுதந்திரத்தின் வரம்புகளை மீறியுள்ளது.
இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருவதாக அவர் கூறியிருப்பது, மக்களை தூண்டிவிடும் வகையில் உள்ளது. இவரது பேச்சானது நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் சீரழிக்கும் வகையில் இருக்கிறது. வேண்டுமென்றே ஒவ்வொரு இந்திய நாட்டவரையும் காயப்படுத்தும் வகையில் தேச விரோத கருத்துக்களை தெரிவித்துள்ளார்’ என்று குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக பாரதிய நியாயா சன்ஹிதாவின் 152 மற்றும் 197 (1) (டி) பிரிவுகளின் கீழ் ராகுல்காந்திக்கு எதிராக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்: ராகுல்காந்தி மீது வழக்கு appeared first on Dinakaran.