சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் கணைய கற்கள்

1 week ago 4

கணையம் என்பது நொதி திரவங்கள், இன்சுலின் போன்ற முக்கிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும் உறுப்பாகும். கணையத்தில் உள்ள செரிமான திரவங்கள் கடினமாகி ஏற்படும் கால்சியம் படிவங்கள் கணைய கற்கள் எனப்படும். இது கணைய குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி வலி மற்றும் வீக்கத்தை உருவாக்கலாம். இது கடுமையான வயிற்றுவலி, வாந்தி, எடை இழப்பு, மஞ்சள் காமாலை மற்றும் ஸ்டேடோரியா (கொழுப்பு மலம்) போன்ற அறிகுறிகளை உண்டாக்கலாம். இது ஏற்பட முக்கியமான காரணம் மதுப்பழக்கம். இந்தப்பழக்கம் இல்லாதவர்களுக்கு பித்தப்பை கற்கள் வருவதற்கு, நாள்பட்ட கணைய அழற்சி காரணமாக இருக்கலாம்.

கீழ்க்கண்ட வேறு காரணிகளாலும் கணைய கற்கள் ஏற்படலாம்.

மரபணு காரணங்கள், ரத்தத்தில் அதிக அளவு ட்ரைகிளிசரைட் கொழுப்பு, சிஸ்டிக் பைப்ரோசிஸ், புகைப்பழக்கம், கணையத்தில் நோய் தொற்று, தவறான உணவுமுறை பழக்கம் (வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல்), ஆட்டோ இம்யூன் கணைய அழற்சி நோய், வளர்சிதை மாற்ற கோளாறுகள் (ஹைபர்கால்சீமியா, போர்பைரியா).

பக்க விளைவுகள்

கணைய கற்கள் நீரிழிவு நோய், தொற்று ஏற்பட்டு உண்டாகும் செப்டிக் ஷாக் மற்றும் கணைய புற்றுநோய் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதற்கு தீர்வாக எண்டோஸ்கோபிக் ரீட்ரோக்ரேட் கோலேஞ்சியோ பான்க்ரெட்டியோகிராபி, எக்ஸ்ட்ராகார்பொரியல் ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி, கணைய நீக்கம் அறுவை சிகிச்சை (கணையத்தின் முழுவதையோ அல்லது ஒரு பகுதியை மட்டுமோ அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது) போன்றவற்றை மருத்துவர் மேற்கொள்ளலாம்.

கணைய கற்கள் உருவாகாமல் தடுக்க கீழ்க்கண்ட உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எண்ணெய்யில் வறுத்த, கொழுப்பு நிறைந்த, பதப்படுத்தப்பட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும். அதிக நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மதுப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அந்த பழக்கத்தை விட்டொழிக்கவேண்டும்.

 

Read Entire Article