சரியான தூக்கம் இல்லையா..? ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்

6 months ago 19

உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் அவசியம். சிலருக்கு சரியான தூக்கம் இருக்காது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பார்கள். இதுபோன்று தொடர்ந்து தூக்கம் சரியாக தூங்கவில்லை என்றால் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேசமயம், ரத்தத்தில் சர்க்கரை அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோய்க்கும், தூக்கத்திருக்கும் சம்பந்தம் உள்ளதா?

சரியாக தூங்கவில்லை என்றால் மன அழுத்த ஹார்மோன் கார்டிசால் (Cortisol) அதிகமாக வெளியிடப்படுகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் மனிதனுக்கு இரண்டு பசி ஹார்மோன்கள் சுரக்கிறது. ஒன்று பசியை குறைக்கும் ஹார்மோன் லெப்டின் (Leptin), மற்றொன்று பசியைத் தூண்டும் ஹார்மோன் (Ghrelin)ஜெர்லின்.

சரியாக தூங்கவில்லை என்றால் மனித உடலில் பசியைக் குறைக்கும் லெப்டின்( Leptin)ஹார்மோன் அளவு குறைகிறது. பசியைத் தூண்டும் ஹார்மோன் ஜெர்லின்(Ghrelin) அளவு அதிகரிப்பதால், அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. குறிப்பாக மாவு சத்து நிறைந்த உணவுகள், அதிக கலோரி உணவுகள் சாப்பிடத்தோன்றுகிறது.

சரியாக தூங்காதவர்கள் ஒரு நாளைக்கு மற்றவர்களைவிட 385 கலோரிகள் அதிகமாக உண்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது உடல் பருமனை அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்கவேண்டும். இல்லையெனில் நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாகும்.

இரவு நேர சர்க்கரை தாழ்நிலை

அதேபோல், சர்க்கரை நோயாளிகள் இரவில் அயர்ந்து தூங்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம். இந்த அளவு தூங்கும் பொழுது 70மிகி/ டெசி லிட்டருக்கு கீழ் குறையும் போது (நாக்டர்னல் ஹெப்போகிளைசீமியா) இரவு நேர ரத்த சர்க்கரை தாழ்நிலை என்று அழைப்பார்கள். ஆனால் அதற்காக மருத்துவர் அனுமதி இல்லாமல் மாத்திரையை நிறுத்திவிடக்கூடாது.

இரவு நேர சர்க்கரை தாழ்நிலை ஏற்பட முக்கிய காரணங்கள்.

1. இரவு உணவை தவிர்ப்பது அல்லது உணவின் அளவை குறைப்பது.

2 . இரவு தூங்கும் முன் மது அருந்துதல்.

3. இரவு தூங்கும் முன் கடுமையான உடற்பயிற்சி செய்தல்.

4. ஞாபகமறதியாலும் அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ அதிகமான அளவு மாத்திரைகள் அல்லது இன்சுலின் செலுத்திக் கொள்ளுதல்.

மேற்கூறியவற்றை தவிர்த்தலே இரவில் தூங்கும்போது ஏற்படும் இரவு நேர சர்க்கரை தாழ்நிலையை தடுக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் இரவு நேர மாத்திரைகளின் டோசை மருத்துவரின் ஆலோசனை பெற்று குறைத்துக் கொள்ளலாம். இரவு நேர மாத்திரைகளை முழுவதுமாக மருத்துவர் ஆலோசனையின்றி நிறுத்துவது தவறாகும்.

 

Read Entire Article