மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் தனது மனைவி கரீனா கபூர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டிற்குள் கடந்த 16-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்து, சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நடிகர் சயிப் அலிகான், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சயிப் அலிகானின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தாக்குதல் நடத்திய நபர் சயிப் அலிகானின் வீட்டில் இருந்து தப்பியோடிய நிலையில், போலீசார் 20 தனிப்படைகள் அமைத்து அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சயிப் அலிகானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "தாக்குதல் நடத்தியவர் ஆக்ரோஷமாக இருந்தார். அவர் சயிப்பை மீண்டும் மீண்டும் தாக்குவதை நான் பார்த்தேன். சயிப்பை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதே முக்கியமாக இருந்தது. தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால் அந்த நபர் எதையும் திருடிச் செல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார்.