புதுடெல்லி,
இந்தியா வங்கதேச எல்லையில், மேற்கு வங்க மாநிலத்தின் சுக்தேவ் எல்லை சோதனைச்சாவடி பகுதியில் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த பகுதியில் சர்வதேச எல்லையில், இரு நாட்டு விவசாயிகளும் பணி புரிந்து கொண்டு இருந்தனர்.
அப்போது வங்கதேச விவசாயிகள் திருட்டில் ஈடுபடுவதாக இந்திய விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தலையிட்டதைத் தொடர்ந்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரு நாட்டு விவசாயிகளும், அவர்களது பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது போன்ற மோதலில் ஈடுபடக்கூடாது என இந்திய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. எந்த பிரச்னையாக இருந்தாலும் எங்களிடம் கூற வேண்டும் எனவும் பாதுகாப்பு படையின் அறிவுறுத்தியுள்ளனர்.