சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள வரதம்பாளையம், பெரியகுளம், சிக்கரம்பாளையம், ராமபைலூர், புளியங்கோம்பை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கி சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால் இப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. விதைக்கிழங்குகளை எடுத்து நடவு செய்து 5 மாதங்களில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும் சம்பங்கி பூ, ஒரு ஏக்கர் பயிரிட தெளிப்புநீர் பாசனத்துடன் சேர்த்து ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 கிலோ முதல் அதிகபட்சம் 40 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தினமும் அதிகாலை 5 மணி முதல் பூக்களை பறிக்க ஆரம்பித்து காலை 8 மணிக்கு பறித்து முடித்து பூக்களை சத்தியமங்கலத்திலிருந்து கோவை, திருப்பூர், சேலம், கொச்சின், மைசூரு, பெங்களூரு, தும்கூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பூவிற்கான விலையானது சத்தியமங்கலத்தில் அதன் வரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. முகூர்த்தம் மற்றும் திருவிழாக்காலங்களில் பூவிற்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு கிலோ பூ பறிக்க ரூ.7 கூலியாக வழங்கப்படுகிறது. ஓரளவுக்கு நல்ல விலை கிடைப்பதால் தற்போது சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள் சம்பங்கியை விரும்பி பயிரிடுகின்றனர். வாழை, மல்லி பயிர்களுக்கு மாற்றாக சம்பங்கியை பயிரிட்டுள்ளதாகவும் ஒருமுறை நடவு செய்யப்படும் சம்பங்கி 5 ஆண்டுகள் வரை பலன் கொடுப்பதாகவும் பிறகு அந்த செடியில் உள்ள கிழங்கை பறித்து நடவு செய்து மீண்டும் சாகுபடிக்கு தயாராவதாக தெரிவிக்கும் விவசாயிகள் மற்ற பயிர்களை காட்டிலும் நோய்தாக்குதல் குறைவாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து பெரியகுளம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறியதாவது: சம்பங்கி பயிரிட முதலில் நிலத்தை 4 முறை நன்றாக உழ வேண்டும். இதைத்தொடர்ந்து ஏக்கர் ஒன்றுக்கு 5 டிராக்டர் லோடு சாண எரு அல்லது கோழி எரு அடி உரமாக இட வேண்டும். ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளியில் விதைக்கிழங்கு நடவு செய்ய வேண்டும். சம்பங்கி பயிருக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் என்ற இருவகையிலும் நீர் பாய்ச்சலாம். தெளிப்பு நீர் பாசனம் நோய் தாக்குதலை வெகுவாக கட்டுப்படுத்துகிறது. ஒரு ஏக்கர் பயிரிட ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், பூக்கள் விற்பனை மூலம் ஓராண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருவாய் கிடைப்பதால் செலவு ரூ.75 ஆயிரம் போக ரூ.2.25 லட்சம் நிகர லாபம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தேவை அதிகரிப்பு
சம்பங்கி மலர் தவிர்க்க முடியாத பூவாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது. கோவில்களில் சுவாமிக்கு மலர் மாலை சாத்துவதிலிருந்து மணவறை அலங்காரம் செய்வது வரை சம்பங்கி மலர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதன் தேவையானது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றது.
லாபகரமான விளை பயிர்
விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கும் இந்த காலகட்டத்தில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் சம்பங்கி மலர் சாகுபடி செய்து லாபம் ஈட்டுவதோடு அப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளர்களுக்கு பூ பறிக்கும் பணி வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.
The post சம்பங்கி விலை உயர்வால் அதிகரிக்கும் சாகுபடி பரப்பு: சத்தியமங்கலம் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.