
நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 'சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் "அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை" உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. நாடோடிகள் படத்தை இயக்கியுள்ளார். பின்னர் நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருந்தார். கடைசியாக 'ராமம் ராகவம்' படத்தில் நடித்தார். இது தமிழ், தெலுங்கில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது புதிய படமொன்றில் சமுத்திரக்கனி மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு 'பைலா' என்று பெயர் வைத்துள்ளனர்.இதில் ரம்யா நம்பீசன், ராஜ்குமார், இலங்கையை சேர்ந்த நடிகை மிச்சலா, யோகிபாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, ஆண்ட்ரூ, என்.இளங்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.
'சேஸிங்' படத்தை இயக்கிய கே.வீரக்குமார் இந்தப் படத்துக்கு கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார். 'அய்யோ சாமி..' ஆல்பம் புகழ் சனுகா இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது.