குஜராத் மாநிலம் வதோதராவில் இந்திய ராணுவத்துக்காக 56 சி 295 ரக விமானங்களை தயாரிப்பதற்காக டாடா நிறுவனத்தின் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். குண்டு வீசுவது, மருத்துவ மீட்புப் பணிகள், விஐபி பயணம், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களைக் கொண்டு செல்வது போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காக தயாரிக்கப்படுகிறது இந்த விமானம். முழுவதுமாக உள்நாட்டிலேயே இந்த விமானத்தை தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலைதான் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம். ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலையில் மேற்கண்ட விமானம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்திய விமானப்படையின் பழைய அவ்ரோ-748 விமானங்களுக்கு பதிலாக 56 சி-295 போக்குவரத்து விமானங்களை வாங்க ஸ்பெயினின் ஏர்பஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2021ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஏர்பஸ் நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 16 விமானங்களை ஸ்பெயினில் தயாரித்து வழங்கும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (டிஏஎஸ்எல்) நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். இதற்காகத்தான் குஜராத் மாநிலம் வதோதராவில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் நிறுவப்படும் முதல் தனியார் போர் விமான உற்பத்தி ஆலை.
உள்நாட்டிலேயே ராணுவ விமானங்களை தயாரிப்பதற்கான ஆலை அமைவது நாட்டுக்குப் பெருமை சேர்க்கக் கூடியது தான். இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் டாடா குழுமத்தை சேர்ந்த 200 பொறியாளர்கள், ஸ்பெயினில் ராணுவ விமான உற்பத்திக்கான பயிற்சியை பெற்றிருக்கின்றனர். அதேநேரத்தில், குஜராத் முதல்வராக இருக்கும்போது அந்த மாநிலத்தில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க நரேந்திர மோடி காட்டிய முனைப்பை, இன்று பிரதமரான பிறகும் முன்னெடுத்துச் செல்வதுதான் பலரது விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. மேற்கண்ட விமான உற்பத்தி ஆலை கூட மகாராஷ்டிராவுக்கு வர வேண்டிய ஒன்றுதான்.
ஆனால், ஒன்றிய பாஜ அரசு இதனை குஜராத்துக்கு கொண்டு சென்று விட்டது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோல், வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தாலேகாவில் ரூ.1.63 லட்சம் கோடி முதலீட்டில் செமி கண்டெக்டர் சிப் அமைக்க திட்டமிட்டிருந்தன. ஆனால், சிவசேனாவில் இருந்து ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று பாஜவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த ஷிண்டே, பாஜவின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து குஜராத்துக்கு இத்திட்டம் கைமாற வழி வகுத்து விட்டார் என்பது எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு.
தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கண்ட விவகாரங்கள் ஆளும் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் பாஜ அங்கம் வகித்தபோதும், குஜராத்துக்கு தொழிற்சாலைகள், முதலீடுகள் இடம் மாறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ஆட்சியில் அங்கம் வகித்தாலும் குஜராத்தில்தான் முதலீடுகள் வரவேண்டும் என ஒன்றிய அரசு முனைப்பு காட்டுவது ஏன்? பிரதமர் குஜராத் முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவுகளை, பிரதமரான பிறகும் தொடர்வது நியாயமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பிரதமர் என்ற முறையில் அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கும் மனப்பாங்கு ஏற்படாவிட்டால் கூட்டாட்சி ஜனநாயகம் அர்த்தமற்றதாகிவிடும் அபாயம் உள்ளது.
The post சமநோக்கு தேவை appeared first on Dinakaran.